குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் 10ம் வகுப்பு மாணவனை அடித்தற்காக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இணையத்தில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வதோதரா பகுதியில் 10 ம் வகுப்பு மாணவன் ஒருவன் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். அந்த பயிற்சி மையத்தின் ஆசிரியரான ஜஸ்பீர்சிங் சவுகான் என்பவர் மாணவன் சரியாக படிக்காததால் பெற்றோரை அழைத்து வரும்படி கூறியுள்ளார்.
அதன்படி அந்த மாணவன் தனது பெற்றோரை பயிற்சி மையத்திற்கு அழைத்து சென்ற போது வகுப்பறைக்குள் ஆசிரியர் மாணவனை அடித்துள்ளார். அடிக்கும் சத்தம் கேட்ட மாணவனின் தந்தை வகுப்பிற்குள் சென்று பார்த்த போது ஆசிரியர் மாணவனை விடாமல் அடித்துக் கொண்டிருந்த நிலையில் மாணவனின் காதுகளில் இருந்து ரத்தம் வழிந்ததை கண்டதும் ஆத்திரமடைந்த அவர் உடனடியாக காவல் நிலையத்தில் ஆசிரியர் மீது புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஆசிரியரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் நடந்து 5 வருடங்களான நிலையில், தற்போது இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆசிரியருக்கு 6 மாத சிறை தண்டனையும, ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
அதில் ஒருவர் “கீழ்படியாத மாணவர்களை தண்டிக்க ஆசிரியருக்கு உரிமை உண்டு. நாங்கள் படிக்கும் காலத்தில் மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக வந்தால் ஆசிரியர்கள் வெளியில் மண்டியிட வைப்பார்கள். அந்த பயம் ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கும். ஆனால் இப்போது அதுவே ஒரு பெரிய குற்றமாக உருவாகிவிட்டது” என்று தெரிவித்திருந்தார்.
இன்னொருவர் “இன்றைய காலகட்டத்தில் மாணவர்களை அடிப்பது குற்றமாகவே மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால் இது தவறு இல்லை” என பதிவிட்டிருந்தார். மேலும் கல்வி முறையில் ஒழுக்கம் எவ்வளவு முக்கியமானது என்றும், ஆசிரியருக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்தும் இணையத்தில் பெரும் விவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
