திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள பால்நாங்குப்பத்தைச் சேர்ந்த கீர்த்திபிரியா, தனது கணவன் மற்றும் அவரது குடும்பத்தின் மீது பொய்ப் புகார் அளித்து, கடந்த சில மாதங்களாக தனது பள்ளிக் கால காதலனான அஜித்குமாருடன் தனியாக வசித்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கீர்த்திபிரியாவின் கணவன் கதிரவன் போலீசில் புகார் அளித்துள்ளார். கீர்த்திபிரியா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுனரான கதிரவனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.

ஆரம்பத்தில் கணவன் வீட்டில் வசித்த கீர்த்திபிரியா, தனது மாமியார் புவனேஸ்வரி மற்றும் மாமனார் செழியனுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், கணவனுடன் தனியாக ஓசூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையே, தனது பள்ளிக்கால காதலனான அஜித்குமாரை மீண்டும் சந்திக்கத் தொடங்கினார் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கடந்த வருடம் கீர்த்திபிரியா, தனது கணவன் மற்றும் அவரின் பெற்றோர்களின் மீது குடும்ப வன்கொடுமை புகார் அளித்த நிலையில், தற்போது அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக, கீர்த்திபிரியா தனது மகளுடன் தாயின் வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏலகிரி செல்லும் வழியில் கதிரவன் தனது மனைவியின் வீட்டை கடந்தபோது, அங்கிருந்த காரில் அஜித்குமார் இருப்பதை கண்டுபிடித்து, உடனடியாக ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அஜித்குமாரை பிடிக்க முயன்றபோது, அவர் சுவர் ஏறி தப்பி ஓடியுள்ளார். தற்போது அந்த வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளதுடன், அஜித்குமாரை பிடிக்க விரைந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.