சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார் (27), திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் போலீசாரால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 சிறப்பு போலீசார் (கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன்) கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் முதலமைச்சரின் உத்தரவின்படி சிபிஐக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதற்கமைய, மதுரை ஐகோர்ட்டின் உத்தரவின்படி மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.

முதற்கட்டமாக, திருப்புவனம் காவல் நிலையத்திலிருந்து வழக்கு சம்பந்தமான அனைத்து ஆவணங்களும் பெற்று, கடந்த ஒரு வாரமாக மதுரை மற்றும் திருப்புவனத்தில் முகாமிட்டு நேரடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிபிஐ விசாரணையின் போது, அஜித் குமாரை அழைத்துச்சென்ற டெம்போ வாகனத்தில் போலி நம்பர் பிளேட் இருந்தது அம்பலமானது. TN 01 G 0491 என்பதற்கு பதிலாக TN 63 G 0491 என்ற போலி பதிவு எண் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், அந்த வாகனத்திலிருந்து மது பாட்டில்கள், சீட்டுக்கட்டுகள் ஆகியனவும் சிபிஐ அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது காவல்துறையில் உள்ளுள்ள முறைகேடுகள் குறித்து கேள்விக்குறிகளை எழுப்பி, சிபிஐ விசாரணையை மேலும் தீவிரமாக்கியுள்ளது.