திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் -பச்சை குப்பம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளப் பகுதியில் ஒரு வாலிபர் நீண்ட நேரமாக சுற்றித்திரிந்துள்ளார். அந்த நபர் சிறிது நேரத்திற்கு பிறகு சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி ரயில் வருவதை அறிந்து தண்டவாளத்தில் சிமெண்ட் கல்லை வைத்துள்ளார்.
அப்போது இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக ஆம்பூர் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி ரயில் நிலைய அதிகாரி போலீசாரிடம் தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தண்டவாளத்தில் இருந்து சிமெண்ட் கல்லை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பின்பு அந்த வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் வேலூர் மாவட்டம் தட்டான் குளம் கிராமத்தை சேர்ந்த சிவகுமார்(23) என்பதும் , இவரது பெற்றோர்கள் கடந்த 2 வருடத்திற்கு முன்பு இருந்து விட்டதால் சிவகுமார் தனியாக வசித்து வந்துள்ளார் எனவும் தெரிய வந்தது.
இவர் காலி மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் டப்பா போன்றவற்றை சேகரித்து அதனை கடையில் விற்று அந்த பணத்தின் மூலம் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். நேற்று சிவகுமார் தண்டவாளத்தின் அருகே மது பாட்டில்களை சேர்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது தண்டவாளத்தின் அருகே சிமெண்ட் சிலாப் இருந்ததை பார்த்து அதிலிருந்த கம்பியை எடுப்பதற்காக தண்டவாளத்தில் வைத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. எனவே சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
