தமிழக முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட பிறகு, அவர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக கட்சியில் இணைய சொல்லி போலீஸார் மிரட்டுவதாகப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், “அவர்கள் தவெகவில் சேருமாறும், தங்களுக்குத் துணையாக இருப்பதாகக் கூறினார்கள்; ஆனால் நாங்கள் எதற்கும் பயப்பட மாட்டோம். இன்று வந்த ஒரு கட்சிக்கு நாங்கள் பயப்பட வேண்டுமா? எங்களை தைரியமாக இருக்கச் சொல்லி எங்கள் தலைவர் (ஸ்டாலின்) தெம்பு கொடுத்துள்ளார், அதனால் எதையும் சந்திக்க நான் தயார்” என்று கூறினார்.

உங்களிடம் குதிரை பேரம் பேசப்பட்டதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இங்கு ஒட்டக பேரமே பேசப்பட்டது, அதெல்லாம் என்னிடம் நடக்காது; நான் ஒன்றும் முதல் போட்டு முதலமைச்சராக வரவில்லை, தளபதி ஸ்டாலினின் கட்டளைகளை நிறைவேற்றும் தொண்டனாக இருக்கிறேன்” என்று ஆவேசமாகப் பதிலளித்தார். இந்த விவகாரத்தில் வரும் 10ஆம் தேதி தன் வழக்கறிஞர் விளக்கம் அளிக்கவிருந்த நிலையில், திட்டமிட்டுத் தன்னை உடனடியாகக் கைது செய்துள்ளனர் என்றும், இந்த சலசலப்புக்குத் தான் அஞ்சப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து தவெக ஆட்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அனிதா ராதாகிருஷ்ணன் முன்வைத்தார். “இன்று தவெகவினரால் கஞ்சா வியாபாரம் நடத்தப்படுகிறது; ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார், அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பினார். இவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆட்சி நடத்துகிறார்கள் என்று சாடிய அவர், இந்த ஆட்சி ரொம்ப நாள் நீடிக்காது, அதிகபட்சம் 6 மாதங்கள் தான் இருக்கும் என்று சவால் விட்டார். மேலும், “நான் இருக்கும் திருச்செந்தூர் சுப்ரமணிய சாமி மீது ஆணையாகச் சொல்கிறேன், 6 மாதத்திற்கு மேல் இந்த தவெக ஆட்சி இருக்காது; இருக்கவும் விட மாட்டோம்” என்று அனிதா ராதாகிருஷ்ணன் மிகக் காட்டமாக எச்சரித்துள்ளார். திமுக எம்.எல்.ஏ நீதிமன்றம் செல்லும் வழியில் தவெக ஆட்சிக்கு எதிராகப் போட்ட இந்தச் சவால் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.