நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 சீட்களில் ஜெயித்த விஜய் தலைமையிலான தவெக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. இந்தச் சூழலில், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்து வருவதால், தவெக குதிரை பேரம் நடத்துவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார். அதேநேரம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், தவெக அரசு பெரும்பான்மை இல்லாமல் நடப்பதால் தமிழகத்திற்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என்று கூறி வந்தார்.

இந்நிலையில், தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காக சென்னையை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் தன்னிடம் 35 கோடி ரூபாய் பேரம் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக  தவெக எம்.எல்.ஏ இளையராஜா சென்னை போலீஸ் கமிஷனர் ஆபீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் திருவல்லிக்கேணி போலீஸார் 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டனர்.

இந்த வழக்கில் ஐபிடிஎஸ் தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவன தலைவர் திருநாவுக்கரசு, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்களான தியாகராஜன், நரேஷ் மற்றும் கரூரை சேர்ந்த திமுக பிரமுகர்களான ரமேஷ், கார்த்தி ஆகியோர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பெங்களூருவில் பதுங்கியிருந்த செல்வன், அதிமுக பிரமுகர் சீனிவாசன், ராஜேஷ் ஆகிய மேலும் 3 பேரையும் தனிப்படை போலீஸார் அதிரடியாகக் கைது செய்து சென்னைக்குக் கொண்டு வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

கைதானவர்கள் போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் சொன்னதன் பேரில்தான் இந்த பேரத்தை நடத்தியதாகக் கூறியுள்ளனர். அதுமட்டுமில்லாமல், தவெக ஆட்சியை கவிழ்க்க மொத்தம் 180 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட்டதாகவும், சென்னையின் கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் வைத்து ஒரு வாரமாக இதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இந்த சதியில் ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்திற்குத் தொடர்பு இருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளதோடு, இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள மற்றவர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.