விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு அருகே உள்ள திருத்தங்கல் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சண்முகசுந்தரம் (48) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் நேற்று மதியம் வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும்போது 2 மாணவர்கள் தாமதமாக வந்தனர். அவர்கள் வெளியே சுற்றி திரிந்துவிட்டு தாமதமாக வகுப்பறைக்கு வந்ததை அறிந்த ஆசிரியர் அவர்கள் இருவரையும் எச்சரித்துள்ளார்.
அப்போது ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் 2 மாணவர்களில் ஒருவர் ஆசிரியர் கண்டித்ததால் கோபமடைந்த நிலையில் தான் பையில் வைத்திருந்த மது பாட்டிலை எடுத்து ஆசிரியரின் தலையில் அடித்துள்ளார். அதில் ஆசிரியர் சண்முகசுந்தரத்திற்கு தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் ரத்தம் வந்ததால் அருகிலிருந்த ஆசிரியர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்த தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பின் காவல் துறையினர் பள்ளிக்கு விரைந்து சென்று ஆசிரியரை தாக்கிய மாணவர்களை கைது செய்தனர். அப்போது மாணவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு சரியாக படிக்காததால் இந்த ஆண்டு படித்து மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று ஆசிரியர் அறிவுரை கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் நடந்த வாக்குவாதத்தில் மாணவர்கள் 2 பேரும் ஆசிரியரை தாக்கியது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் ஆசிரியரை தாக்கிய மாணவர்களுக்கு உதவியாக இருந்த 2 மாணவர்கள் என 4 பேரை பள்ளியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யும்படி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
