சென்னை மாவட்டம் பள்ளிக்கரணை பகுதியில் மணிகண்டன் என்ற 25 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தன்னுடன் பணிபுரியும் சில நண்பர்களை சந்தித்து விட்டு பைக்கில் பள்ளிக்கரணைக்கு திரும்பி கொண்டிருந்தார்.
இவர் மேடவாக்கம் மேம்பாலத்தின் அருகே சென்றபோது திடீரென அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் பைக் மோதிய நிலையில் மேம்பாலத்திலிருந்து அதாவது சுமார் 60 அடி உயரத்திலிருந்து வாலிபர் தூக்கி கீழே வீசப்பட்டார். அவர் பள்ளிக்கரணை போலீஸ் ஸ்டேஷன் அருகே விழுந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இது தொடர்பாக வாகன ஓட்டிகள் கொடுத்த தகவலின் படி உடனடியாக ஆம்புலன்ஸ் அந்த இடத்திற்கு வந்து வாலிபரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. அங்கு மணிகண்டனை பரிசோதனை செய்த டாக்டர்கள் செல்லும் வழியிலேயே உயரிழந்து விட்டதாக கூறிவிட்டனர். சமீபத்தில் தான் இந்த வாலிபரின் தந்தை நடேசன் இறந்துள்ளார். இந்த நிலையில் தற்போது வாலிபரும் விபத்தில் உயிரிழந்து விட்டார்.
இது குடும்பத்தினர் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து பள்ளிக்கரணை காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
