நெல்லை மாவட்டம் வீரவநல்லூருக்கு அருகேவுள்ள மானா பரநல்லூர் பகுதியில் சங்கர குமார் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவரது மகன் சபரி கண்ணன் வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அப்பள்ளியில் கடந்த 4 ம் தேதி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் போது, மாணவர் சபரி கண்ணன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதை அறிந்த ஆசிரியர்கள் அவரை அழைத்து எச்சரித்துள்ளனர்.
ஆசிரியர் கண்டித்ததால் மன வேதனையில் இருந்த சபரி கண்ணன் கடந்த 7 ம் தேதி வீட்டில் வைத்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது பள்ளிக்கு வந்த சில மணி நேரங்களிலேயே சபரி கண்ணன் மயங்கி விழுந்த நிலையில் ஆசிரியர்கள் அவரை உடனடியாக சேரன்மாதேவி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்ட பின் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடல்நிலை மோசமானதால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த சபரி கண்ணன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து மாணவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த உறவினர்கள் நேற்றிரவு வீரவநல்லூர் காவல் நிலையத்திற்கு முன்பு மாணவரின் உடலுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதோடு மாணவன் படித்து வந்த தனியார் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 பேருந்துகளை தீ வைத்து எரித்துள்ளனர். மேலும் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் உறவினர்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
