மதுரை கோ. புதூர் பகுதியில் முருகானந்தகோபால் (38) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது குழந்தைகளுடன் நேற்று முன்தினம் முருகானந்தகோபால் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர்களை சிரிக்க வைப்பதற்காக தொட்டில் கயிற்றை எடுத்து தனது கழுத்தில் சுற்றிக்கொண்டு வேடிக்கை காட்டினார். அந்த சமயத்தில் கழுத்தில் இருந்த கயிறு எதிர்பாராத விதமாக இறுகிய நிலையில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மூச்சு விட முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர் சற்று நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுத நிலையில் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் முருகானந்த கோபாலின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.