சென்னை கொளத்தூர் பகுதியில் 33 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அண்ணா நகர் பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். அப்போது கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த சிவா (51) என்ற நபருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் நெருங்கி பழகிய நிலையில் சிவா அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியதோடு தான் ஒரு ஹோட்டல் அமைக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட 4 வருடங்களாக அந்த பெண்ணுடன் சிவா பழகிய நிலையில் அவரிடம் இருந்து 110 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை வாங்கியுள்ளார். அந்தப் பெண் தன்னை சிவா திருமணம் செய்து கொள்வார் என ஆசையோடு காத்திருந்த நிலையில் சிவா வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.

இதனால் அந்த பெண் தான் கொடுத்த பணம் மற்றும் நகைகளை திருப்பித் தருமாறு கேட்ட நிலையில் சிவா அந்த பெண்ணை அடித்ததோடு இருவரும் உல்லாசமாக இருந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும் இது தொடர்பாக இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து சிவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.