மதுரை கோ.புதூர், காந்திபுரம் மணிமாறன் தெருவைச் சேர்ந்த முருகானந்த கோபால் (வயது 38) என்பவர், ஒரு தனியார் மருத்துவமனையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளிட்ட மூன்று பிள்ளைகள் உள்ளனர். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்,  நேற்று முன்தினம்  தன்னுடைய பிள்ளைகளை சிரிக்க வைக்க எதையோ புதுசா முயற்சி செய்ய முடிவு செய்தார்.

அதன்படி, வீட்டில் தொட்டிலுக்காக கட்டப்பட்டிருந்த கயிற்றை கழுத்தில் சுற்றிக்கொண்டு “தூக்குபோல்” விளையாட முயன்றுள்ளார். ஆனால் அந்த முயற்சி எதிர்பாராதவிதமாக மோசமாக முடிந்தது. கயிறு கழுத்தில் இறுக்கி விட்டதால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் சற்று நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவரது இந்த செயலை நேரில் பார்த்த பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி, மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாட்டாக செய்ய முயன்ற ஒரு தவறான முடிவு, ஒரு பாசமிகு தந்தையின் உயிரை பறித்தது என்பதையும், இந்த பரிதாபம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.