தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பூவரசூர் பகுதியைச் சேர்ந்தவர் மிகாவேல் (வயது 28). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருச்செந்தூர் மற்றும் ஆறுமுகநேரி காவல் நிலையங்களில் காவலராக பணியாற்றி வந்தவர்.

இவர் மீது ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, 15 நாட்களுக்கு முன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் சொந்த ஊருக்கு திரும்பியிருந்தார்.

இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு மிகாவேல் ஆறுமுகநேரியில் பணியாற்றிய போது, 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி, திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மிகாவேல் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து, நேற்று முன்தினம் அவரை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை சிறையில் காவல்துறையினரின் பாதுகாப்பில் அடைத்துள்ளனர்.