கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு பூங்கா நகரமென்று அழைக்கப்படுகிறது. பல வகையான ஆராய்ச்சி நிறுவனங்களும் இங்கு அமைந்துள்ளதால் பெங்களூரு இந்தியாவின் மிக உயர்ந்த நகர பொருளாதார மையங்களில் ஒன்றாகும். இந்நிலையில் பல மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் மாணவர்கள் மற்றும் தொழில் நிபுணர்கள் பெங்களூருவை நோக்கி வருகிறார்கள்.

இந்நிலையில் அதிக அளவிலான தெருநாய்கள் பெங்களூருவில் காணப்படுவதால் சிறுவர், சிறுமிகள் முதியவர்கள் போன்ற பெரும்பாலான மக்கள் நாய் கடியினால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்து சில மாதத்திற்கு முன்பு தெரு நாய்கள் கடித்ததில் 70 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தா நிலையில், கடந்த 6 மாதத்தில் மட்டுமே பெங்களூருவில் 7000 பேர் தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு 2,79,000 தெரு நாய்கள் பெங்களூரு மாநகரில் இருப்பதாக மாநகராட்சி கணக்கெடுப்பில் தெரிய வந்தது. இதனை கட்டுப்படுத்துவதற்காக கருத்தடை செய்யப்பட்ட நிலையிலும் அது பயனளிக்கவில்லை. இதனால் தெரு நாய்கள் பொது மக்களை கடிப்பதற்கு காரணம் அவற்றிற்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காததால் தான் என்று அதிகாரிகள் கூறிய நிலையில் பெங்களூரு மாநகராட்சி தற்போது தெருநாய்களுக்காக சிக்கன் ரைஸ் எக் ரைஸ் வழங்கும் புதிய திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

இதற்காக ரூ 2 கோடியே 88 லட்சம் ஒதுக்கியுள்ளதாக மாநகராட்சி கூறியுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி சிறப்பு கமிஷனர் சுரக்கர் விகாஸ் கூறும்போது, ”கடந்த வருடம் தெருநாய்கள் மனிதர்களை கடிக்காமல் இருப்பதற்காக சைவ உணவு அளிக்கும் திட்டத்தை தொடங்கினோம். ஆனால் அந்தத் திட்டம் சரியாக பலனளிக்கவில்லை. எனவே தற்போது சிக்கன் ரைஸ் பாக்யா என்ற திட்டத்தை மாநகராட்சி அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

அந்த திட்டத்தின் மூலம் 2.79 லட்சம் நாய்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதன்படி ஒரு நாளைக்கு 5000 தெரு நாய்களுக்கு அசைவ உணவுகள் வழங்கப்படும்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து பொதுக்கள் ”மனிதனுக்கு ஒருவேளை சாப்பாடு கிடைக்காமல் துன்பப்பட்டு வரும் நிலையில், தெரு நாய்களுக்கு சிக்கன் ரைஸ், எக் ரைஸ் கொடுப்பது சரியானது அல்ல” என்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.  மேலும் சிலர் இது போன்ற ருசியான உணவுகளை கொடுத்தால் தெருநாய்களை அட்டகாசம் அதிகரித்து பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று குற்றம் சாட்டி வருகின்றன.