சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் 13 மணல் குவாரிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் தொடர்ந்து இயற்கை வளங்கள் சூறையாடப்படுகிறது. பசுமையாக இருக்கும் தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் முயற்சிதான் இது. ஊழல் செய்ய வேண்டும், கொள்ளையடிக்க வேண்டும், நல்லா இருக்கும் தமிழகத்தை பாலைவனமாக மாற்ற வேண்டும் என்பதுதான் திமுக அரசின் கொள்கையாக நான் பார்க்கிறேன்.

இயற்கை வளங்கள் தொடர்ந்து சூறையாடப்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது. மொத்த மக்களையும் திரட்டி போராட்டம் நடத்துவோம். திமுக செய்யக்கூடிய அராஜகங்களுக்கு அளவே இல்லாத நிலைதான் தற்போது உள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்து தக்க தண்டனை வாங்கித் தர வேண்டும் என்று ஜெயக்குமார் பேசியுள்ளார்.