அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது நடத்திய 40 நாள் தாக்குதல், கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தால் சற்று ஓய்ந்தது. இந்த நிலையில், பாகிஸ்தானில் நடந்த அமெரிக்கா – ஈரான் இடையிலான 21 மணிநேர அமைதி பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

இதைத் தொடர்ந்து, ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க போர்க்கப்பல்கள் சூழ்ந்துள்ளதால் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. அந்த வழியாகச் செல்லும் உணவு மற்றும் எரிசக்தி கப்பல்களுக்கு வரி விதிக்கப்போவதாக ஈரானும் பதிலுக்கு அதிரடி காட்டி வருகிறது.

இந்தச் சூழலில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேலின் தாக்குதலால் ஈரானின் அணு ஆயுத நெட்வொர்க் மற்றும் ஏவுகணை உற்பத்தி மையங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும், ஈரானிடம் இன்னும் அதிக அளவிலான யுரேனியம் கையிருப்பில் இருப்பது மேற்கத்திய நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

அணு ஆயுத அச்சுறுத்தலை நிரந்தரமாக நீக்க ஒரு முறையான ஒப்பந்தம் அவசியம் என்று குறிப்பிட்டுள்ள நெதன்யாகு, இதில் அமெரிக்காவுடன் தங்களுக்கு எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.