வளைகுடா பகுதியில் ஆளில்லா விமானங்களின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்காவின் அமைதி திட்டத்திற்கு ஈரான் தனது பதிலை அளித்துள்ளது. அமெரிக்காவின் எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கத் தயங்க மாட்டோம் என்று எச்சரித்துள்ள ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன், பேச்சுவார்த்தை என்பது ஒருபோதும் எதிரியிடம் சரணடைவதாக அர்த்தம் ஆகாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணுசக்தி நிலையங்களை முழுமையாகக் கலைக்கும் வரை போர் முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறி வரும் நிலையில், ஈரானின் இந்த பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் மத்தியஸ்தர்கள் வழியாக அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த பதிலில், அனைத்துப் பகுதிகளிலும் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக லெபனானில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே நடக்கும் மோதலை நிறுத்துவது மற்றும் கடல் வழி கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவற்றில் ஈரான் அதிக கவனம் செலுத்தியுள்ளது. இதன் மூலம் வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க ஈரான் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகத் தெரிகிறது.