அமெரிக்காவின் போஸ்டன் நகரில் வசிக்கும் கிரிஸ் என்ற 25 வயது ஆட்டிசம் பாதித்த இளைஞர், தனது பிறந்தநாளில் யாருமற்ற தனிமையால் மிகவும் வருத்தமடைந்துள்ளார். தனக்கு ஒருவராவது பிறந்தநாள் வாழ்த்து சொல்ல மாட்டார்களா என்ற ஏக்கத்துடன், அவசர உதவி எண்ணான 911-க்கு போன் செய்து, “எனக்கு யாராவது பிறந்தநாள் வாழ்த்து சொல்ல முடியுமா?” என்று கேட்டுள்ளார். பொதுவாக இது போன்ற அழைப்புகளை அலட்சியப்படுத்தும் வாய்ப்பு இருந்தாலும், அங்கிருந்த அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் செயல்பட்டனர்.
போஸ்டன் காவல் அதிகாரிகள் இருவர், கிரிஸின் வீட்டுக்கே நேரில் சென்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். வெறும் கையோடு செல்லாமல், அவருக்காக ஒரு மஃபின் மற்றும் மெழுகுவர்த்திகளுடன் சென்ற அவர்கள், கிரிஸுக்குப் பிறந்தநாள் பாடல் பாடி வாழ்த்து தெரிவித்தனர். எதிர்பாராத இந்த அன்பைக் கண்டு கிரிஸ் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. போலீஸாரின் இந்த மனிதாபிமானச் செயல் தொடர்பான பாடிகேம் (Bodycam) வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் இதயங்களை வென்று வருகிறது.
