மத்தியப் பிரதேச மாநிலம் போபால் கத்தாரா ஹில்ஸ் பகுதியில், கடந்த மே 12-ஆம் தேதி ட்விஷா சர்மா (33) என்ற பெண் தனது கணவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இக்கொலை வழக்கில் ட்விஷாவின் கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார் கிரிபாலா சிங் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தற்போது மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) இந்த வழக்கைக் கையில் எடுத்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கின் முக்கிய சாட்சியான நீரஜ் துபே என்பவர், குற்றம் சாட்டப்பட்ட சமர்த் சிங்கின் நண்பர்களால் தாக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரிபாலா சிங்கின் வீட்டிற்கு அருகில் பார்லர் நடத்தி வரும் நீரஜ் துபே, இந்த வழக்கில் காவல்துறையினரால் சாட்சியாகச் சேர்க்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“Law & Order Failure in Bhopal? Key Twisha Murder Witness Attacked by Friends of Prime Accused”#Madhyapradesh #Bhopal – A significant new twist has emerged in the #TwishaSharma murder case after a key witness was allegedly beaten up by friends of the main accused, Samarth… pic.twitter.com/TlpPvfg03u
— Siraj Noorani (@sirajnoorani) June 1, 2026
சாட்சி நீரஜ் துபே, கடந்த சனிக்கிழமையன்று அந்தப் பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த ஊழியர்களுக்கும் அவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. உணவக உரிமையாளர் சமர்த் சிங்கின் நண்பர் என்பதால், ட்விஷா வழக்கில் சாட்சி சொன்னதற்காகவே தன்னை அவர்கள் கொடூரமாகத் தாக்கியதாக நீரஜ் துபே குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், நீரஜ் துபே போதையில் வந்து உணவகத்தில் ரகளையில் ஈடுபட்டதாக உணவகத் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், இருதரப்பு புகார்களையும் பெற்றுக்கொண்டு காவல் நிலைய பொறுப்பாளர் சுனில் துபே தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, ட்விஷா சர்மாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை உடைக்க சிபிஐ அதிகாரிகள் களத்தில் இறங்கியுள்ளனர். ட்விஷாவின் கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார் கிரிபாலாவைச் சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்துச் சென்ற சிபிஐ குழுவினர், ட்விஷாவின் உடல் எடையை ஒத்த 80 கிலோ எடையுள்ள ஒரு டம்மி பொம்மை, தூக்குக் கயிறு மற்றும் பெல்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தி, அவர் எப்படித் தூக்கில் தொங்கினார், உடல் எப்படி கீழே இறக்கப்பட்டது என்ற மரணக் காட்சியை அப்படியே மறுஉருவாக்கம் செய்து சோதித்தனர். பெண் அதிகாரி உள்ளிட்ட சிபிஐ குழுவினர், வீட்டில் இருந்த உறவினர்கள் மற்றும் சாட்சிகளிடம் அக்குவேறு ஆணிவேறாகக் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருவதால், இந்த வழக்கில் விரைவில் அதிரடி திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
