மத்தியப் பிரதேசம் மாநிலம் மௌ பகுதியைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி ஒருவர், குவாலியர் நவகிரகக் கோயில் மலைப்பகுதியில் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜனகஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அரங்கேறிய இக்கொடூரம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் காதலனான ராமு குர்ஜார், அவனது நண்பர்கள் அருண் மற்றும் கௌரவ் குஷ்வாஹா ஆகிய மூன்று குற்றவாளிகளையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த மே 28-ஆம் தேதி, காதலி என்ற பெயரில் ஆசை வார்த்தை கூறி அந்தச் சிறுமியைத் தனது புல்லட் வாகனத்தில் குவாலியர் மலைப்பகுதிக்கு ராமு குர்ஜார் கடத்திச் சென்றுள்ளார்.
அங்குள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து ராமு குர்ஜாரும் அவனது நண்பன் அருணும் சேர்ந்து அச்சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன் பிறகு, காதலி என்றும் பாராமல் அந்தச் சிறுமியைத் தனது நண்பன் அருணுக்கு ₹50,000-க்கு விற்க ராமு குர்ஜார் பேரம் பேசியுள்ளார். தன் கண் முன்னே தன் மானம் விற்கப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அச்சிறுமி, தன்னை விடுவிக்குமாறு கதறி அழுது தப்பிக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காமுகர்கள் இருவரும் சேர்ந்து சிறுமியின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு உடலைப் புதரில் வீசித் தப்பியுள்ளனர். மேலும், ஆதாரங்களை அழிப்பதற்காக மறுநாளே தங்களது மற்றொரு நண்பனான கௌரவ் என்பவருடன் காரில் வந்து, சடலத்தின் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துள்ளனர்.
இதற்கிடையே, சிறுமி காணாமல் போனது குறித்து அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் காதலன் ராமு குர்ஜாரைப் பிடித்து அவனது மொபைல் அழைப்புப் பதிவுகளைக் காட்டி நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் ஒட்டுமொத்த கொடூரமும் அம்பலமானது. கைதான குற்றவாளியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஜூன் 1-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று நவகிரகக் கோயில் மலைப்பகுதியிலிருந்து சிறுமியின் பாதி எரிந்த சடலத்தை போலீசார் மீட்டனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
