உத்தரப் பிரதேச மாநிலம் பெஹடா அஸ்ஸா கிராமத்தைச் சேர்ந்த விகாசித் என்ற ராக்கி (36) கடந்த மே 18-ஆம் தேதி முதல் திடீரென காணாமல் போயுள்ளார். இவர் தனது மனைவி ரேணு, வளர்ப்பு மகன் பாதல் மற்றும் மருமகள் நிஷா ஆகியோருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று பாக்பத் செல்லலாம் எனக்கூறி ராக்கியை அவரது மனைவி காரில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் மனைவி மட்டும் வீட்டிற்குத் திரும்பிய நிலையில், ராக்கி மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார். இதுகுறித்து ராக்கியின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ராக்கியின் மனைவி ரேணு, வளர்ப்பு மகன் பாதல் மற்றும் மருமகள் நிஷா ஆகியோர் திடீரென வீட்டை பூட்டிவிட்டுத் தலைமறைவாகினர்.
இதனையடுத்து அவர்களை தேட காவல்துறை தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், காட்டுப் பகுதியில் போலீசாருக்கும் குற்றவாளிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. இதில் மாண்டி தியாகி என்பவர் காலில் குண்டடி பட்டு போலீசாரிடம் சிக்கினான். அவரிடம் நடத்திய அதிரடி விசாரணையில், காணாமல் போன ராக்கி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. ராக்கியின் வளர்ப்பு மகன் பாதலுக்கு இருந்த முன்விரோதம் காரணமாக, அவனது தாயான ரேணு மற்றும் குடும்பத்தினர் உட்பட 5 பேர் சேர்ந்து இந்தச் சதித்திட்டத்தைத் தீட்டியுள்ளனர். முதலில் ராக்கியைக் கடத்தி, துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
பின்னர் கொலையை மறைப்பதற்காக, ராக்கியின் தலையைத் துண்டித்து கால்வாயில் வீசியுள்ளனர். அவரது உடல் பகுதியை ஒரு வயலில் உப்புப் போட்டுப் புதைத்துள்ளனர். கைதான குற்றவாளி மாண்டி தியாகி கொடுத்த தகவலின் பேரில், போலீசார் ஜேசிபி எந்திரம் மூலம் குறிப்பிட்ட வயலைத் தோண்டி ராக்கியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்தத் துரோகக் கொலையில் தொடர்புடைய ராக்கியின் மனைவி, வளர்ப்பு மகன் மற்றும் மருமகள் உள்ளிட்டோரைத் தேடி போலீசார் தீவிர வலைவீசி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
