கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு கரிக்குழி பகுதியைச் சேர்ந்த அகிலா என்பவரின் ஒரு வயதுக் குழந்தை அர்ஷித், வாந்தி எடுத்ததாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். குழந்தையின் உடலில் காயங்கள் மற்றும் சிராய்ப்புகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாட்டி ரீனா, பேரனின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில், நெஞ்சை பதற வைக்கும் கொடூரக் கொலைச் சம்பவம் அம்பலமானது. குழந்தையின் பிறப்புறுப்பு உள்பட உடல் முழுவதும் 51 இடங்களில் ரத்தக் காயங்களும், தீக்காயங்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அது கொலை என்பது உறுதியானது.
போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அகிலாவின் கள்ளக்காதலன் அஸ்கர் என்பவரே குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்தது வெளிச்சத்திற்கு வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அகிலா கர்ப்பிணியாக இருந்தபோது அவரது கணவர் தற்கொலை செய்துகொண்டதால், அதே பகுதியைச் சேர்ந்த டிரைவரான அஸ்கர் என்பவருடன் அகிலாவுக்குக் கள்ளக்காதல் ஏற்பட்டு, இருவரும் கணவன்-மனைவியாக ஒரே வீட்டில் வாழத் தொடங்கியுள்ளனர். முன்னதாக, அஸ்கர் குழந்தையை அடித்துத் துன்புறுத்துவதை அறிந்த பாட்டி ரீனா, குழந்தையை மீட்டுத் தருமாறு போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால், குழந்தையின் சட்டப்பூர்வ பாதுகாப்பு தாயிடம்தான் இருக்க வேண்டும் என போலீசார் கூறியதால் ரீனாவால் குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
சம்பவத்தன்று அகிலாவும், கள்ளக்காதலன் அஸ்கரும் உல்லாசமாக இருந்தபோது, பசியால் குழந்தை அர்ஷித் கதறி அழுதுள்ளான். உல்லாசத்திற்கு இடையூறாகக் குழந்தை அழுததால் ஆத்திரமடைந்த அஸ்கர், பிஞ்சு என்றும் பாராமல் குழந்தையைச் சுவரில் தூக்கி வீசியதோடு, தலையைச் சுவரில் அடித்து, சிகரெட் லைட்டரால் உடல் முழுவதும் சூடு வைத்துள்ளார். கள்ளக்காதல் மோகத்தில் இருந்த தாய் அகிலா, தன் கண் முன்னரே தன் பெற்ற குழந்தைக்கு நடந்த இந்தச் சித்திரவதையைத் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துள்ளார். மேலும், இக்கொடூரத்தை மறைக்க மருத்துவமனையில் நாடகமாடியுள்ளார். ஒட்டுமொத்த கேரளாவையே உலுக்கிய இந்த விவகாரத்தில், பெற்ற தாய் அகிலா மற்றும் அவரது கள்ளக்காதலன் அஸ்கர் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையிலடைத்தனர்.
