அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலத்தில் ஒட்டுமொத்த மனிதகுலத்தையே உலுக்கும் வகையிலான ஒரு கொடூரமான பாலியல் குற்ற வழக்கு தற்பொழுது நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை எட்டியுள்ளது. அதாவது 11 வயது சிறுமி ஒருவர், மிக நீண்ட காலமாகத் தனது சொந்த வீட்டிலேயே கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, மருத்துவ உதவி ஏதுமின்றி வீட்டிலேயே ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இந்த வழக்கில் நடத்தப்பட்ட டிஎன்ஏ (DNA) பரிசோதனை அறிக்கை, அந்தப் பிஞ்சு குழந்தையின் வாழ்க்கையைச் சீரழித்த கொடூரக் குற்றவாளி வேறு யாருமல்ல, அவளது சொந்தத் தந்தைதான் என்பது ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இவ்வழக்கின் பின்னணி குறித்து அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகையில், 35 வயதான டஸ்டின் ஜோயல் வாக்கர் என்ற நபர் தனது மைனர் மகளைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இந்த விவகாரத்தில் குற்றவாளியான கணவனுக்குத் துணையாக, பெற்ற மகளுக்கு நேர்ந்த கொடுமையைத் தடுத்து நிறுத்தாமல் மறைக்க முயன்றதாகவும், மகளுக்குத் தேவையான மருத்துவ உதவியை வழங்க மறுத்ததாகவும் சிறுமியின் தாய் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தத் துரோகத்தின் உச்சமாக, சிறுமிக்குக் கர்ப்பம் ஏற்பட்ட விவரம் வெளி உலகிற்குத் தெரியாமல் இருக்க, அவளைப் பள்ளியிலிருந்தும் நிறுத்தியுள்ளனர். வழக்கமாக இதுபோன்ற அசாதாரணச் சூழல்களைப் பள்ளி ஆசிரியர்களே முதலில் கண்டறிந்து அதிகாரிகளுக்குத் தெரிவிப்பார்கள் என்பதால், அதைத் தடுக்கவே இந்தச் சதி அரங்கேறியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமி வீட்டிலேயே ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற குழந்தைகள் பாதுகாப்பு முகமை மற்றும் காவல்துறையினர் நடத்திய தீவிர சோதனையில், அந்த வீட்டின் நிலையும் மிக மோசமாகக் காணப்பட்டது. ஆறு குழந்தைகள் வசிக்கும் அந்த வீட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாகக் குடிநீர் வசதி கூட இல்லாமல், மிக அசுத்தமான சூழலில் குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டுப் சித்திரவதை செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள அனைத்துக் குழந்தைகளையும் அதிகாரிகள் தங்களது பாதுகாப்பில் மீட்டனர். இந்த விவகாரத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட மிருகத்தனமான தந்தை டஸ்டினுக்கு ஏற்கனவே 42 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயுள் காலக் கண்காணிப்பும் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த வழக்கின் அடுத்தகட்டமாக, குற்றத்தை மறைக்க உடந்தையாக இருந்த 34 வயதான அந்தச் சிறுமியின் தாயையும் ஜுரி நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்துள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு துஷ்பிரயோகத்தைத் தூண்டியது, அலட்சியமாக இருந்தது உள்ளிட்ட 6 கடுமையான பிரிவுகளின் கீழ் அவர் குற்றவாளியாக உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணையின் போது, “ஒரு 11 வயது சிறுமி எந்தவொரு மருத்துவ உதவியும் இன்றி வீட்டிற்குள் குழந்தையைப் பெற்றெடுத்த கொடுமையைக் கேட்டு என் இதயமே நொறுங்கிவிட்டது” என்று நீதிபதி கண்ணீர் மல்கக் குறிப்பிட்டது நீதிமன்றத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. இச்சம்பவம் அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.
