தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள இடையன்குளம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (26) என்பவர், கடந்த 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ளார். தற்போது சென்னை ஆவடி பட்டாலியனில் காவலராகப் பணியாற்றி வரும் இவர், சமீபத்தில் விடுமுறையின் காரணமாக தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
அப்போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவருக்கு விஜயகுமார் பாலியல் ரீதியாக கடுமையான தொல்லை கொடுத்துள்ளார். இதனால் நிலைகுலைந்து போன அந்த சிறுமி, அழுதுகொண்டே தனக்கு நேர்ந்த கொடூரத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக மகளிர் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்தனர்.
பாதிக்கப்பட்ட பெற்றோரின் புகாரைத் தொடர்ந்து, மகளிர் போலீசார் இந்த விவகாரத்தில் உடனடியாக களமிறங்கி தீவிர விசாரணை நடத்தினர். இதில்,விஜயகுமார், பள்ளி மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து, சட்டம் தன் கடமையைச் செய்யும் விதமாக, காவலர் விஜயகுமார் மீது போலீசார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் அதிரடியாக வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த விஜயகுமாரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பலத்த பாதுகாப்புடன் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் தென்காசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
