அமெரிக்காவில் இந்தியப் பெண் நிகிதா கொடிஷாலா கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கில், கடந்த 8 மாதங்களாகத் தலைமறைவாக இருந்த அவரது முன்னாள் காதலன் உத்திரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேல் படிப்புக்காகவும் வேலைக்காகவும் அமெரிக்கா சென்ற ஒரு இந்தியப் பெண்ணின் வாழ்க்கை, சொந்த நாட்டு ஆணாதிக்க வெறியால் அங்கே பரிதாபமாக முடிவுக்கு வந்த சம்பவம் ஏற்கனவே அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது கொலையாளி இந்தியாவில் வந்து தலைமறைவாக இருந்த தகவல் பலரையும் உரைய வைத்துள்ளது.

அமெரிக்காவில் வசித்து வந்த நிகிதா கொடிஷாலா, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தனது குடியிருப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்தத் கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து, அவருடன் நெருக்கமாக இருந்து பிரிந்த முன்னாள் காதலன் மீது காவல்துறையினரின் கவனம் திரும்பியது.

ஆனால், கொலை நடந்த கையோடு அந்த நபர் அமெரிக்காவிலிருந்து சாமார்த்தியமாகத் தப்பித்து இந்தியாவுக்கு ஓடி வந்துவிட்டார். சர்வதேசக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவரைப் பிடிக்க அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ மற்றும் இந்தியக் காவல்துறையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

நீண்ட 8 மாதத் தேடுதலுக்குப் பிறகு, ஆக்ராவில் தலைமறைவாக இருந்த அந்த முன்னாள் காதலனை இந்தியப் புலனாய்வுத் துறையினர் ரகசியத் தகவலின் அடிப்படையில் வளைத்துப் பிடித்துள்ளனர். தனது கொடூரக் குற்றத்தை மறைத்துவிட்டு இந்தியாவில் சாதாரண மனிதனைப் போல வலம் வந்த அந்த நபரின் கைது, நிகிதாவின் குடும்பத்தினருக்குச் சிறிய ஆறுதலையும் நீதிக்கான நம்பிக்கையையும் அளித்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட அந்த நபரை அமெரிக்காவிற்கு நாடுகடத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை இரு நாட்டு அதிகாரிகளும் தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.