அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கே மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் நேபாள ராணுவ வீரரின் நெகிழ்ச்சியான செயல் ஒன்று உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் மனதை உருக்கியுள்ளது.

​வெள்ளத்தில் சிக்கித் தவித்த பச்சிளம் இரட்டைக் குழந்தைகளை நேபாள ராணுவ வீரர்கள் மிகச் திறமையாக மீட்டுள்ளனர். அப்படி மீட்கப்பட்ட அந்த பிஞ்சு இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை பயத்திலும், அதிர்ச்சியிலும் தொடர்ச்சியாக அழுது கொண்டே இருந்துள்ளது. அதைக் கண்ட மீட்புப் பணியில் இருந்த ராணுவ வீரர் ஒருவர், அந்தக் குழந்தையைத் தனது நெஞ்சோடு அரவணைத்துத் தாங்கிப்பிடித்து, தாய் மடியைப் போல் அன்போடு ஆறுதல் அளித்துள்ளார்.

​பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகி, ஊரே அழிந்து கொண்டிருக்கும் ஒரு மாபெரும் பேரழிவுச் சூழலுக்கு நடுவே, ஒரு ராணுவ வீரர் சீருடையில் தாய்மை உணர்வோடு பச்சிளம் குழந்தைக்கு ஆறுதல் அளிக்கும் இந்த மனிதநேயத்தின் பேரன்புத் தருணம் புகைப்படமாகவும், வீடியோவாகவும் வெளியாகிச் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

​இயற்கையின் கொடூரத் தாண்டவத்திற்கு இடையே சாமானிய மனிதர்களின் உயிரைக் காப்பாற்றத் தங்களின் உயிரைப் பணயம் வைத்துப் போராடும் நேபாள ராணுவ வீரர்களின் இந்த அளப்பரிய சேவையையும், அந்த வீரரின் நெகிழ்ச்சியான மனிதநேயத்தையும் உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்கள் பலரும் தங்களது நெஞ்சார்ந்த பாராட்டுக்களோடு பகிர்ந்து வருகின்றனர்.