டெல்லியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள மிக ஆடம்பரமான 5 நட்சத்திர நட்சத்திர விடுதியில் 10 நாட்கள் தங்கி சொகுசு வசதிகளை அனுபவித்துவிட்டு, ₹5.74 லட்சம் கட்டணத்தைச் செலுத்தாமல் யாருக்கும் தெரியாமல் தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆடம்பர விருந்தோம்பலுக்கும் உயர்தரப் பாதுகாப்புக்கும் பெயர் பெற்ற 5 நட்சத்திர விடுதியிலேயே, மிகச் சாமார்த்தியமாக அதிகாரிகளையும் ஊழியர்களையும் ஏமாற்றிவிட்டு ஒரு குடும்பமே நழுவியுள்ள இந்தச் சம்பவம், சுற்றுலாத் துறையிலும் ஹோட்டல் நிர்வாக வட்டாரத்திலும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
உதயப்பூருக்குச் சுற்றுலா வந்த அந்த டெல்லி குடும்பத்தினர், நகரின் பிரபல நட்சத்திர விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். 10 நாட்கள் தங்கலின் போது விடுதியின் அனைத்து உயர்தர வசதிகளையும், உணவக சேவைகளையும் தாராளமாகப் பயன்படுத்தி மகிழ்ந்துள்ளனர்.
ஆனால், 10 நாட்கள் கழித்து விடுதியை விட்டு வெளியேறும் சூழல் வந்தபோது, ஹோட்டல் நிர்வாகத்திடம் கட்டணத்தைச் செலுத்தாமல் சாமார்த்தியமாகத் தப்ப திட்டமிட்டுள்ளனர். ஊழியர்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டு, தங்களது உடைமைகளுடன் அந்த குடும்பத்தினர் விடுதியிலிருந்து யாருக்கும் சந்தேகம் வராத வகையில் நைஸாக வெளியேறியுள்ளனர்.
பின்னர், அறை காலியாக இருப்பதையும், ₹5.74 லட்சம் மதிப்பிலான பில் தொகை செலுத்தப்படாமல் இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்த ஹோட்டல் நிர்வாகத்தினர், உடனடியாக அவர்களின் தொடர்பு எண்களைத் தொடர்புகொள்ள முயன்றனர்.
ஆனால் அவை அனைத்தும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல்துறையில் அதிகாரப்பூர்வமாகப் புகாரளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, டெல்லியைச் சேர்ந்த அந்த மர்மக் குடும்பத்தைக் கைது செய்யத் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.
