சமூக வலைதள உலகில் ‘ட்விட்டர்’ என்ற பெயர் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு, அதன் பெயர் ‘எக்ஸ்’ என மாற்றப்பட்டது. பழைய ட்விட்டர் பெயர் மற்றும் அடையாளம் மறைந்த நிலையில், தற்போது Twitter.now என்ற பெயரில் புதிய சமூக வலைதளம் அறிமுகமாகியுள்ளது. இந்த புதிய தளத்தை ‘ஆபரேஷன் புளூபேர்ட்’ என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இந்த புதிய நிறுவனத்தில் ட்விட்டரில் முன்பு பணியாற்றிய சில ஊழியர்களும் இடம்பெற்றுள்ளனர். பழைய ட்விட்டரை அப்படியே மீண்டும் உருவாக்குவது தங்களது நோக்கம் அல்ல என்றும், நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பயனர் கட்டுப்பாட்டை மையமாகக் கொண்ட புதிய சமூக தளத்தை உருவாக்குவதே நோக்கம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. பதிவுகள், பதில்கள் மற்றும் மறுபதிவுகள் போன்ற பழக்கமான வசதிகளும் இதில் இடம்பெறுகின்றன.
Twitter.now தளத்தில் செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட VERA என்ற அமைப்பும் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் பார்க்கும் பதிவுகளின் தகவல்களைச் சரிபார்த்து, அவற்றுக்கான ஆதாரம் மற்றும் சூழலை வழங்குவதுடன், நம்பகத்தன்மை மதிப்பெண்ணையும் வழங்கும் வகையில் இந்த அமைப்பு செயல்படும் என நிறுவனம் கூறுகிறது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப குறைந்த நம்பகத்தன்மை கொண்ட பதிவுகளைத் தவிர்க்கும் வசதியையும் பெற உள்ளனர்.
இதற்கிடையே, ‘ட்விட்டர்’ என்ற பெயரைப் பயன்படுத்துவது தொடர்பாக எக்ஸ் நிறுவனத்துக்கும் ஆபரேஷன் புளூபேர்டுக்கும் இடையே சட்டப் பிரச்னை தொடர்கிறது. எக்ஸ் நிறுவனம் ‘ட்விட்டர்’, ‘ட்வீட்’ உள்ளிட்ட பெயர்களில் தனக்கு இன்னும் உரிமை இருப்பதாக வாதிடுகிறது. மறுபுறம், அந்தப் பெயரை எக்ஸ் பயன்படுத்துவதை நிறுத்தியதால் அதை மீண்டும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக புதிய நிறுவனம் கூறுகிறது. மேலும், Twitter.now தளத்தின் செயலி தற்போது கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் வெளியாகவில்லை; ஆரம்ப அணுகலுக்காக இணையதளம் வழியாகப் பதிவு செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
