கடந்த 79 ஆண்டுகளாக பாகிஸ்தானின் சட்டவிரோதக் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், தற்போது மக்கள் பாகிஸ்தானுக்கு எதிராகப் பெரும் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

அரசியல் உரிமைகள் மறுக்கப்படுவது, பொருளாதார நெருக்கடி மற்றும் இஸ்லாமாபாத்தின் தலையீடு ஆகியவற்றால் ஆத்திரமடைந்த மக்கள், ‘ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி’  தலைமையில் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேர்தல் நடைமுறைகளும் இந்த எதிர்ப்பைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், போராட்டம் நடைபெற்றபோது ஒருவர் உயிரிழந்தது சூழலை மேலும் மோசமாக்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மக்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலால் அப்பகுதியே கலவர பூமியாக மாறியுள்ளது. போராட்டத்தை ஒடுக்க பாகிஸ்தான் அரசு ராணுவத்தை இறக்கியதுடன், இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளையும் முடக்கியுள்ளது.

ஆனால், அரசின் இத்தகைய அடக்குமுறை நடவடிக்கைகள் போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, மக்களின் கோபத்தை மேலும் அதிகரித்துள்ளன. 79 ஆண்டுகளாகப் பிடித்து வைத்திருந்த நிலத்தில், தனது கட்டுப்பாட்டைத் தக்கவைக்க பாகிஸ்தான் தற்போது பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.