“சீனாவில் கற்பனையே செய்ய முடியாத அளவுக்கு ஒரு விசித்திரமான ரியல் எஸ்டேட் மோசடி அரங்கேறி ஒட்டுமொத்த உலகையே வாயடைக்க வைத்துள்ளது மக்களே!
சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள சியான் நகருக்கு அருகே, ‘சாம்பல் சந்தை’ (Gray Market) எனப்படும் சட்டவிரோத கிராமப்புற நிலத்தில் கட்டப்பட்ட பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பில், ‘ஷென்’ என்ற நபர் கடந்த 2013-ல் மார்க்கெட் விலையை விட 3 மடங்கு கம்மியான விலைக்கு (சுமார் ரூ.33.69 லட்சம்) 34-ஆவது மாடியில் ஒரு பிளாட்டை முன்பதிவு செய்துள்ளார்.
இதற்காகத் தனது ரத்தப் வியர்வை சிந்திய பணத்தில் இருந்து அட்வான்ஸாக ரூ.16 லட்சத்தையும் அந்த பில்டரிடம் கட்டியுள்ளார். பில்டர்களும் ‘அரசு அனுமதி அப்புறமா வந்திரும் பாஸ்’ என ஆசை வார்த்தை கூற, அதை நம்பி ஏமாந்துள்ளார்.
2015-ல் கிடைக்க வேண்டிய வீடு, தாமதமாகி 2017-ல் பில்டர் கூப்பிட்டுச் சொன்ன போதுதான் ஷெனுக்கு தலையிலேயே இடி விழுந்தது! ‘பாஸ்.. நீங்க வாங்குன 34-ஆவது மாடியே அந்த பில்டிங்ல இல்ல, நாங்க 32 மாடிதான் கட்டியிருக்கோம்’ என அசால்ட்டாகக் கைவிரித்துள்ளனர்.
32-ஆவது மாடியில் மாற்று வீடு தருவதாகக் கூறினாலும், மீதிப் பணம் இல்லாததால் அந்த வீடும் கைநழுவி வேறொருவருக்கு விற்கப்பட்டது. காசையாவது திருப்பித் தாங்கப்பா என ஷேன் கோர்ட்டுக்குப் போக, வட்டியோடு பணத்தைத் திருப்பித் தரவும், பில்டர் மீது ‘நுகர்வுக் கட்டுப்பாட்டு உத்தரவு’ போடவும் ஜட்ஜ் உத்தரவிட்டார்.
ஆனால், அந்த பில்டர் நிறுவனத்தின் பெயரில் ஒரு பேங்க் அக்கவுண்ட்டோ, சொத்தோ இல்லாததால் பணத்தை மீட்க முடியாமல் உள்ளூர் நீதிமன்றமே தற்பொழுது தவித்து வருகிறது. மலிவு விலைக்கு ஆசைப்பட்டுப் பணத்தையும் இழந்து, சொந்த வீட்டுக் கனவும் சிதைந்து ஷென் தவிக்கும் கதை நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரிய எச்சரிக்கை!”
