ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் கடுமையான தாக்குதலை நடத்தின. இதன் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியப் பாதையாக விளங்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை  ஈரானியப் படைகள் முற்றிலும் முடக்கின. இந்தச் சூழலில், தற்போது இரு நாடுகளுக்கும் இடையே தற்காலிக அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டு, ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நேற்று ஒரே நாளில் 1.7 கோடி பேரல்கள் கச்சா எண்ணெய்யுடன் 55 வணிகக் கப்பல்கள் இந்நீரிணையைக் கடந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ளன. இந்த அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் கணிசமாகக் குறையத் தொடங்கியுள்ளது.

இருப்பினும், இந்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புதிய அதிரடி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், “தற்போது ஏற்பட்டுள்ள தற்காலிக உடன்படிக்கையின்படி, 60 நாட்களுக்கு மட்டுமே கப்பல்கள் சுங்கக் கட்டணமின்றி இலவசமாகச் செல்ல அனுமதிக்கப்படும்; அதற்குள் இரு நாடுகளுக்கும் இடையே இறுதி உடன்பாடு எட்டப்படாவிட்டால், 60 நாட்களுக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்கா சுங்கக் கட்டணம் விதிக்கும்” என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பாதுகாப்பு வழங்க அமெரிக்கா செயல்பட்டு வருவதாகவும், அதற்கான முந்தைய மற்றும் எதிர்காலச் செலவினங்களை ஈடுகட்டவே இந்தச் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். டிரம்பின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.