ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரைச் சேர்ந்த இந்த மாணவர், ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்தபோது தனது அசல் பெயருக்குப் பதிலாக ஹிட்லரின் பெயரைப் பயன்படுத்தியுள்ளார்.  இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜிப் படைகளை வீழ்த்திய நீண்ட வரலாற்றுப் பின்னணி ரஷ்யாவுக்கு உண்டு என்பதால், ரஷ்ய சட்டப்படி நாஜி கொள்கைகளையோ, சின்னங்களையோ அல்லது பெயர்களையோ பொதுவெளியில் பயன்படுத்துவது மற்றும் காட்சிப்படுத்துவது சட்டவிரோதமும் கடும் குற்றமுமாகும்.  இந்த நிலையில், மாணவரின் இந்த விசித்திரமான செயல் அரசு அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

மாணவர் தரப்பில் இது ஒரு விளையாட்டான செயல் என்று கூறப்பட்ட போதிலும், இந்தத் தேச விரோதச் செயலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு 5 நாட்கள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. அதுமட்டுமின்றி, அவர் படித்து வந்த கல்லூரியும் அவரை கல்வி நிறுவனத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்த ஒரு சாதாரண விளையாட்டான விஷயம், ரஷ்யாவின் கடுமையான நாஜி எதிர்ப்புச் சட்டங்களால் மாணவரின் சிறை தண்டனையிலும், கல்லூரிப் படிப்புப் பறிபோனதிலும் முடிவடைந்தது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.