பெங்களூரு சகாகரா நகர் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில், ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு வயது சிறுமி சங்கீதா மீது ஆறு தெரு நாய்கள் கூட்டமாகப் பாய்ந்து கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளன.

கட்டுமானத் தொழிலாளியின் மகளான அச்சிறுமி சாலையில் நடந்து சென்றபோது, எதிர்பாராத விதமாக நாய்கள் அவரைத் தாக்கியதில் முகம், கை மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரு நாய் தொல்லை குறித்து ஏற்கனவே பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நடமாடவே அச்சப்படும் சூழல் நிலவுவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த விபத்தைத் தொடர்ந்து, மாநகராட்சியின் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தியுள்ளனர்.

தெரு நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த விரைவில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ள போதிலும், பெங்களூருவில் அதிகரித்து வரும் இந்த அச்சுறுத்தல் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.