தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகள் ஓட்டுக்காகப் பணம் கொடுப்பதைப் பற்றி நடிகர் விஜய் தனது பாணியில் மிக எதார்த்தமாகவும், அதேசமயம் அதிரடியாகவும் பேசியுள்ளார். தேர்தல் நேரத்தில் 1000, 2000, 3000 ஏன் 5000 ரூபாய் வரை கூடக் கொடுப்பார்கள் என்றும், கொடுத்த காசுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக உங்கள் குலதெய்வம் அல்லது சாமி மீது சத்தியம் வாங்கிக் கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டார்.

இத்தனை காலமாக உங்களை இப்படித்தான் ஏமாற்றி வருகிறார்கள் என்று விஜய் வேதனை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “அவர்கள் கொடுக்கும் பணத்தைச் சந்தோஷமாக வாங்கிக் கொள்ளுங்கள், ஏனென்றால் அது உங்களது பணம் தான். ஆனால், பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களின் காதிலேயே விசிலை ஊதி அனுப்பிவிடுங்கள்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.

அதாவது, மற்ற கட்சிகள் கொடுக்கும் பணத்தைப் பெற்றுக்கொண்டாலும், வாக்களிக்கும் போது தனது ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தான் அவர் அப்படி நாசூக்காகவும், மாஸாகவும் புரிய வைத்தார். ஊழல் பணத்தை மக்களிடமே திருப்பிச் சேர்ப்பதில் தவறில்லை என்ற ரீதியில் அமைந்த அவரது இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.