நடிகர் விஜய்யின் அரசியல் மாநாடு மற்றும் பொதுக்கூட்ட நிகழ்வில், கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தினால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் மயக்கமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் ஒருபுறம் இருக்க, ரசிகர்கள் ஒரே நேரத்தில் முண்டியடித்ததால் அந்த இடமே திணறியது. இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு நிர்வாகிகள் பலரும் வரிசையாக மயங்கி விழுந்தனர்.
மயக்கமடைந்தவர்களைத் தொண்டர்களும் அங்கிருந்த தன்னார்வலர்களும் உடனடியாக மீட்டு, தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸ்கள் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றனர். கூட்டம் சாரை சாரையாக வெளியேற முயன்றபோது ஏற்பட்ட இந்த நெரிசலில் சிக்கி, பலர் கீழே விழுந்து காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. போதிய இடவசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், எதிர்பாராத மக்கள் அலையினால் ஏற்பட்ட இந்த அசம்பாவிதம் மாநாட்டுத் திடலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
