உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில், தனது கணவரை கொலை செய்ததற்காக ரீனா என்ற பெண் மற்றும் அவரது காதலன் சலேக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொள்ள விரும்பிய ரீனா, தனது கணவரான பிரதீப்பை கொல்லும் திட்டத்தில் சலேக்குடன் சேர்ந்து செயல்பட்டதாக தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பிரதீப் (வயது 48), ஹரித்வாரைச் சேர்ந்த இ-ரிக்ஷா ஓட்டுநராக இருந்தார்.
கடந்த ஜூலை 14ஆம் தேதி, ஹரித்வாரின் பத்ரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பிரதீப்பின் சடலம் அவரது வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரது மருமகன் மங்கேராம் போலீசில் புகார் அளித்ததையடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீசார் விசாரணையில், பிரதீப்பின் மனைவி ரீனா (36) தனது காதலன் சலேக்குடன் சேர்ந்து இந்த கொலைக்குத் திட்டமிட்டது உறுதியாகியது. ரீனா ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து கொண்டவர் என்றும், மூன்றாவது முறையாக சலேக்கை திருமணம் செய்ய எண்ணியிருந்தார் என்றும் தெரிய வந்தது.
தொலைபேசி உரையாடல்கள், சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இருவரும் பிடிபட்டனர். விசாரணையின் போது, சலேக் தனது மொபைலை அணைத்து தலைமறைவான நிலையில் இருந்தார். அவரை போலீசார் லக்சர் ரயில் நிலையம் அருகே கைது செய்தனர். பின்னர், ரீனாவும் கைது செய்யப்பட்டார். இருவரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். ரீனா, “நான் சலேக்குடன் சேர்ந்து என் கணவரை கழுத்தை நெரித்து கொன்றேன்; பின்னர் அவரது உடலை தோட்டத்தில் வீசினோம்,” என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் பெருமளவில் சமூக வலைதளங்களில் பரவி, மக்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஐந்து குழந்தைகளின் தாய் என்ற நிலையில் ரீனாவின் இந்த செயல், பலரின் கோபத்தையும் கண்டனத்தையும் உருவாக்கியுள்ளது. பத்ரி காவல் நிலைய போலீசார் வழக்கு விசாரணையை தீவிரமாக நடத்தி வருகின்றனர். இரண்டு குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
