அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் 40 நாட்களைக் கடந்த நிலையில், பாகிஸ்தானின் சமரச முயற்சியால் தற்போது இரண்டு வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தப் போர் நிறுத்தத்தின் முக்கிய நிபந்தனையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் இன்னும் முழுமையாகத் திறக்கவில்லை.
ஒரு நாளைக்கு 15 கப்பல்கள் மட்டுமே செல்ல அனுமதி அளித்துள்ளதால், உலக நாடுகளில் எரிசக்தி தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி நீடிக்கிறது. ஈரானின் இந்த நிபந்தனை மீறல் காரணமாக, போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும் பதற்றம் குறையாமல் உள்ளது.
ஈரான் பிடிவாதம் காட்டுவதால், அந்த நாட்டுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை இந்தப் போரில் நேரடியாகப் பங்கேற்காத இங்கிலாந்தும் இப்போது களம் இறங்கியுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இது குறித்து டொனால்ட் டிரம்புடன் ஆலோசித்துள்ளதாகவும், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க சில நாடுகளுடன் இணைந்து ராணுவ நடவடிக்கை எடுக்கப் பரிசீலித்து வருவதாகவும் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தொடரும் வேளையில், இங்கிலாந்தின் இந்த அதிரடி முடிவு போரை மீண்டும் தீவிரப்படுத்துமா என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.
