ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, 37,000 டன் உரங்களை ஏற்றிச் சென்ற ‘பங்களார் ஜாய்ஜாத்ரா’ என்ற வங்கதேசக் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஈரான் அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர். சவுதி அரேபியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகருக்குச் செல்ல முயன்ற இந்த கப்பல், பலமுறை அனுமதி கோரியும் ஈரானிய கடற்படையினரால் திருப்பி அனுப்பப்பட்டது.
இதனால் வேறு வழியின்றி அந்த கப்பல் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா கடற்கரைக்கே திரும்பியுள்ளது. இந்த சிக்கலால் வங்கதேச கப்பல் போக்குவரத்து கழகம் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதுடன், சுமார் 40 நாட்களாக அந்த கப்பல் பாரசீக வளைகுடா பகுதியிலேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது ஷார்ஜாவில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ள இந்த கப்பலில் 31 வங்கதேச மாலுமிகள் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் இருப்பில் உள்ளதாகவும், அவர்களின் பாதுகாப்பைக் கருதி கூடுதல் போர் கால ஊதியம் வழங்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வங்கதேச அரசு தற்போது ஈரான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால், வரும் ஞாயிறு அல்லது திங்கட்கிழமைக்குள் கப்பல் பயணிக்க அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பிப்ரவரி மாதம் இந்தியாவிலிருந்து சரக்குகளை ஏற்றிச் சென்ற இந்த கப்பல், போர் தீவிரமடைந்ததால் திட்டமிட்டபடி பயணிக்க முடியாமல் நடுக்கடலில் தவித்து வருகிறது.
