விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், பிரதமர் நரேந்திர மோடியின் ஒரு நாள் தமிழக வருகைக்காக சுமார் 30 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ஆடம்பரமான மேடைகள், பிரம்மாண்ட விளம்பரங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்காக கோடிக்கணக்கான ரூபாய் விரயம் செய்யப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் மக்கள் அவதிப்பட்டு வரும் வேளையில், மக்கள் நலனைப் புறந்தள்ளிவிட்டு இத்தகைய அரசியல் கலாசாரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் வரிப்பணம் அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதில் மாணிக்கம் தாகூர் உறுதியாக உள்ளார்.

இந்நிலையில் தமிழகம் எப்போதும் மக்கள் நல ஆட்சியையும், மாநில உரிமைகளையும் முன்னிறுத்தும் மண் என்று குறிப்பிட்ட அவர், இத்தகைய வீண் செலவு செய்யும் அரசியல் கலாசாரம் தமிழகத்தில் வேரூன்றக் கூடாது என்று தெரிவித்துள்ளார். புனிதமான மக்கள் வரிப்பணத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மக்களிடமே இருப்பதாகவும், எனவே பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை அரசியல் ரீதியாகத் தடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.