திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி, பெண் தொழிலதிபரை ஏமாற்றி ரூ.80 லட்சம் பறித்ததோடு, ஆபாச வீடியோவை காட்டி மிரட்டிய ஆயுதப்படை காவலர் மீது மகளிர் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகரைச் சேர்ந்த பெண் ஒருவர் சொந்தமாகத் தையல் கடை மற்றும் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமான நிலையில், இந்த பெண்ணுக்கு ஆமத்தூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்த சுந்தர்ராஜ் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கத்தைப் பயன்படுத்திக் கொண்ட சுந்தர்ராஜ், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி நெருங்கிப் பழகியுள்ளார். இந்நிலையில், அவருடன் தனிமையில் இருந்தபோது ரகசியமாக வீடியோ எடுத்து வைத்ததாகக் கூறப்படுகிறது.
அந்த ஆபாச வீடியோவை உறவினர்களுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டி, கடந்த சில காலங்களாக அந்தப் பெண்ணிடமிருந்து சிறுகச் சிறுக சுமார் ரூ.80 லட்சம் வரை சுந்தர்ராஜ் பறித்துள்ளார். மேலும், அந்தப் பெண்ணின் மகளை மருத்துவப் படிப்பில் (MBBS) சேர்த்துவிடுவதாகக் கூறி, அதற்காகவும் பலமுறை பெருந்தொகையைப் பெற்று ஏமாற்றியுள்ளார்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண், சுந்தர்ராஜிடம் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், பணத்தைத் திருப்பித் தர மறுத்த சுந்தர்ராஜ், வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும், மீறினால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவலர் சுந்தர்ராஜ் மீது மோசடி, மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே இப்புகார் தொடர்பாகத் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் முதல் சுந்தர்ராஜ் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது தலைமறைவாக உள்ள அவரைப் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
