தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், கணவனே அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலக்கோடு அடுத்த ஜெல்திம்மனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாக்கியராஜ் 35, இவருக்கும் நிவேதிதா 30, என்பவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, இரண்டு மகன்கள் உள்ளனர்.
மேலும் நிவேதிதாவிற்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பாக்கியராஜ் பலமுறை கண்டித்தும், பெரியவர்கள் முன்னிலையில் சமரசம் செய்தும் நிவேதிதா அந்த உறவைக் கைவிடவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில், கடந்த மார்ச் 4-ம் தேதி இரவு இது தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பாக்கியராஜ், வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் நிவேதிதாவின் கழுத்துப் பகுதியில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த நிவேதிதா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் தகவலறிந்து வந்த பஞ்சப்பள்ளி போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தப்பியோட முயன்ற பாக்கியராஜைக் கைது செய்த போலீசார், இக்கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
