தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் தாராளமாகப் புழக்கத்தில் இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். சாக்லேட் மற்றும் திரவ வடிவில் கஞ்சா கிடைப்பதால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைக்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டிருப்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். “இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இந்த திமுக அரசு இன்னும் ஆட்சியில் நீடிக்க வேண்டுமா?” எனப் பொதுமக்கள் மத்தியில் அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
நிர்வாகத் தோல்வியே போதைப் பொருள் புழக்கத்திற்கு முக்கிய காரணம் எனச் சாடிய EPS, ஒரு அதிரடி வாக்குறுதியையும் அளித்துள்ளார். “அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அடுத்த 3 மாதங்களுக்குள் தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் முற்றிலும் ஒழிக்கப்படும்” என அவர் ஆவேசமாக அறிவித்துள்ளார். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டத் தவறிய திமுக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என அவர் விடுத்த இந்த சவால், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
