கோவையில் 10 வயது சிறுமி இருவரால் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட அந்தச் சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்த இருவரே இந்த கொடூரத்தைச் செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனரும் திரைப்பட இயக்குநருமான பா.ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்ற அரசின் உத்தரவாதத்தோடு மட்டும் இந்த கொடூரத்தை கடந்து போக முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த தேர்தலில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் முக்கிய பேசுபொருளாக இருந்ததை சுட்டிக்காட்டிய அவர், புதிய அரசு பொறுப்பேற்று இரண்டு வாரங்களே ஆகி இருந்தாலும், அதை ஒரு காரணமாகக் கூறாமல் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.