சென்னையில் உள்ள ஒரு பொதுக் கழிவறையில், பிறந்த சில நிமிடங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை தூய்மைப் பணியாளர் பர்வீனா கண்டறிந்தார். அவர் உடனடியாக சக பணியாளர்களிடம் தெரிவிக்க, துப்புரவு மேற்பார்வையாளர் உதவியுடன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தூய்மைப் பணியாளர்களின் உதவியோடு குழந்தையை மீட்டு, தங்களின் வாகனத்திலேயே அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று முதலுதவி அளித்துக் காப்பாற்றினர்.

அதன் பிறகு, வென்டிலேட்டர் வசதி கொண்ட குழந்தைகள் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அந்தப் பச்சிளம் குழந்தை பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டது. உயிருக்கு போராடிய குழந்தையை உடனடியாக மீட்டு, சரியான நேரத்தில் முதலுதவி அளித்து காப்பாற்றிய போலீசாரின் இந்த மனிதாபிமான செயல் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, அந்தக் பச்சிளம் குழந்தையைக் கழிவறையில் வீசிச் சென்ற பெண் யார் என்பது குறித்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.