சேலம் மாவட்டத்தில் உள்ள நவப்பட்டி காலனியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கரும்பு வெட்டும் தொழிலாளி ஆவார். இவருக்கு ராதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நிச்சம்பாளையத்தில் இருக்கும் கோவிலில் ராதாவின் உறவினர் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றது. இதனால் குணசேகரனின் குடும்பத்தினர் அங்கு சென்றார். பின்னர் திருமணம் முடிந்ததும் குணசேகரன் உள்பட 16 பேர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.

அந்த வாகனத்தை வெங்கடாசலம் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் திங்களூர் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது . இந்த விபத்தில் குணசேகரன் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.