திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திமுக எம்எல்ஏ பழனியாண்டிக்கு சொந்தமான கல்குவாரியில், கருப்பசாமி என்ற இளைஞர் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களாக காணாமல் போன அந்த இளைஞரைத் தேடி அவரது உறவினர்கள் குவாரிக்குச் சென்றபோது, அவர் அங்கு வரவில்லை என்று நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது அதே இடத்தில் உடல் கண்டெடுக்கப்பட்டிருப்பது மரணத்தில் பல மர்மங்கள் இருப்பதை உணர்த்துவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே கரூர் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களைத் தாக்கிய புகாரில் எம்எல்ஏ பழனியாண்டி மீது குற்றச்சாட்டுகள் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அன்புமணி, இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அந்த இளைஞர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் சதி உள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று அவர் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.