தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தி.மு.க. வேட்பாளர்களுக்கான நேர்காணலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக, கடந்த 36 ஆண்டுகளாகத் தேர்தலில் போட்டியிட்டு வந்த மூத்த அமைச்சர் பொன்முடி, இந்த முறை விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை. அவருக்குப் பதிலாக அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான பொன். கவுதமசிகாமணி திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்.
இதனால் நீண்ட காலத்திற்குப் பிறகு பொன்முடி தேர்தல் களத்தில் நேரடியாகப் பங்கெடுக்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வந்த பொன்முடி, தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு 2016 முதல் திருக்கோவிலூர் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார். சமீபத்தில் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட நிலையில், அவர் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவர் ஒதுங்கிக்கொண்டு தனது மகனுக்கு வாய்ப்பு கோரியுள்ளதால், கட்சித் தலைமை என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இதன் மூலம் சுமார் 36 ஆண்டுகால பொன்முடியின் தேர்தல் பயணம் தற்காலிகமாக ஒரு நிறைவுக்கு வந்துள்ளது.
