தமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்காகத் தனியாகத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் கார்த்தி சிதம்பரம் தலைமையிலான 30 பேர் கொண்ட குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மக்களின் முக்கியப் பிரச்சினைகளை ஆய்வு செய்து வரும் இந்தக் குழு, வரும் 27-ஆம் தேதிக்குள் முழு அறிக்கையையும் தயார் செய்துவிடும்.
இந்த அறிக்கை டெல்லி மேலிடத்தின் ஒப்புதலுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் வெளியிட உள்ள இந்தத் தேர்தல் அறிக்கையில் மக்களின் மனதைக் கவரும் வகையிலான முக்கிய வாக்குறுதிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் சில முக்கிய வாக்குறுதிகளை மட்டும் தனியாகத் தேர்வு செய்து, அவற்றை அஞ்சல் அட்டைகளில் அச்சிட்டு காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் நேரடியாக அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள் ஒவ்வொரு வீட்டையும் சென்றடையும் என அக்கட்சியினர் நம்புகின்றனர்.
