புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான அரசின் முடிவைக் கடுமையாக விமர்சித்து தேமுதிக இளைஞர் அணி செயலாளர் விஜயபிரபாகரன் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார். பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைத்தால் விவசாய நிலங்கள் பெருமளவில் பாதிக்கப்படும் எனக் கூறி தவெக அரசு அத்திட்டத்தை ரத்து செய்த நிலையில், தற்போது அதற்குப் பதிலாகச் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பரிந்துரைக் கடிதத்தை மத்திய அரசுக்குத் தமிழக அரசு அனுப்பியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை பெரும் முரண்பாடாக இருப்பதாக விஜயபிரபாகரன் சாடியுள்ளார்.

​செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “பரந்தூரில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று கூறி திட்டத்தை ரத்து செய்த அரசு, இப்போது செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புதிய இடம் தேர்வு செய்யும் போது, அங்குள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படாதா?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். மேலும், பரந்தூரில் ஏற்கனவே அரசுக்காக 40% நிலத்தை வழங்கிய விவசாயிகள் என்ன முட்டாள்களா என்றும், அவர்களின் வாழ்வாதாரம் என்னாவது என்றும் அவர் காட்டமாகக் கேட்டுள்ளார்.