அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலம் அலெக்ஸாண்ட்ரியாவில் ஹாலோவீன் முகமூடிகள் மற்றும் உடைகளை அணிந்த மூவர், நள்ளிரவில் ஒரு வீட்டிற்குள் நுழைய முயன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் நடந்த இந்த சம்பவம், வீட்டின் வாசலில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. காட்சிகளில், கோமாளி போன்ற ஹாலோவீன் உடையணிந்த மூவர், வீட்டின் கதவின் அருகில், மிரட்டல் விடுப்பதைக் காணலாம்.

 

 

View this post on Instagram

 

A post shared by ABC News (@abcnews)

“நீங்க வெளியே வர்றீங்களா இல்லன்னா நாங்க உள்ளே வர்றோம்!” எனும் குரலும், “கதவைத் திற!” என கத்தும் மற்றொரு குரலும் தெளிவாக கேட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வீட்டில் தாயாரை பார்க்க வந்திருந்த ஷைலா என்ற பெண், முதலில் இதை வெறும் ஹாலோவீன் நகைச்சுவை என நினைத்ததாக கூறியுள்ளார்.

“முதலில் நான் இதை சின்ன குறும்பு மாதிரி தான் நினைத்தேன். ‘ஹாலோவீன் வாழ்த்துகள்’னு சொல்லியும் பார்த்தேன். ஆனால் அவர்கள் கதவைத் தட்டிக் கொண்டே, கைப்பிடியை இழுத்துக் கொண்டே இருந்தபோது ஏதோ சரியில்லை என்பதைக் கண்டேன்,” என்று அவர் தெரிவித்தார்.

அவர்களை எச்சரித்தும், 911 (அமெரிக்க அவசர எண்) அழைப்பதாகச் சொன்னபோதும், குழுவினர் பின்னாலிலுள்ள கேட்டை உடைத்து உள்ளே நுழைய முயன்றதாக அவர் கூறினார்.

“அவர்கள் நாற்காலியை எடுத்துக்கொண்டு கதவை உடைக்கப் போவதாகச் சொன்னபோது என் இதயம் நொறுங்கியது. அது ஒரு விளையாட்டு அல்ல என்று புரிந்தது,” என்று ஷைலா கூறினார். இந்த சம்பவம் ஒரு “குறும்பு முயற்சியை விட மிகக் கடுமையானது” என புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது அந்த மூவரையும் தேடி வரும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.